• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் பெண் கொலை! கொலையாளி வாக்குமூலம்!

Dez 29, 2021

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தனித்து வாழ்ந்த பெண் ஒருவர் நேற்று யூனியன்குளத்தில் உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இராசேந்திரம் இராசலட்சுமி என்ற 67 வயதான இந்தப் பெண், லண்டனில் பிள்ளைகளுடன் வசித்து வந்தநிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார்.

இவர் பூநகரி, தம்பிராய் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர் என்றும், கணவர் பூநகரியில் விவசாயம் செய்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி, உதயநகரில் உள்ள தனது காணி ஒன்றைப் பராமரிப்பதற்காக இராசலட்சுமி, அம்பாள்குளத்தில் வீடொன்றை வாடகைக்குப் பெற்று அங்கு வசிந்து வந்திருக்கிறார்.

நேற்றுமுன்தினம் பிற்பகலுக்குப் பின்னர் – பிற்பகல் 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயிருந்தார். காலையில் அவர் வங்கி ஒன்றுக்குச் சென்று திரும்பியிருந்தார்.

வீட்டிலிருந்தவரைக் காணவில்லை வீட்டின் உரிமையாளர் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்றைச் செய்தார்.

முறைபாட்டை அடுத்து, கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் உள்ளே இரத்தக்கறைகள் அவதானிக்கப்பட்டது. அதையடுத்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரின் சந்தேகவட்டத்துக்குள், இராசலட்சுமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் இளைஞர் வீழ்ந்தார்.

22 வயதான அந்த இளைஞர் ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியவர். போதைக்கு அடிமையான அந்த இளைஞன் குற்றப் பின்னணி உடையவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் இரவு இளைஞர் கைது செய்யப்பட்டார். அப்போதும் அவர் போதையில் இருந்ததால் பொலிஸாரின் விசாரணைகள் தேக்கமடைந்திருந்தது.

பொலிஸ் விசாரணையின் போது இளைஞர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார். கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சாதித்திருக்கிறார்.

பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். இராசலட்சுமியைக் கொலை செய்ததாகவும், உடலை யூனியக்குளத்தில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் வீசியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சந்தேகநபரின் தகவலுக்கு அமைய இராசலட்சுமியின் உடல் பாலம் ஒன்றின் கீழ் உரப்பையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் முதலைகள் அதிகம் என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அம்பாள்குளத்துக்கும், சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 18 கிலோமீற்றர். உரப்பையில் கட்டப்பட்ட உடலை, தனது நண்பர் ஒருவரின் உதவியைப் பெற்று மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வீசியதையும் அந்த இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி, மோதிரம், ஒரு சோடி காதணி, ஒரு சோடி வளையல் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் தொடர்பாக விசாரணைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகைகளுக்காகவே கொலை செய்தேன் என்று சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கின்றார்.

பழைய ஓடுகள் நிரப்பப்பட்ட பை ஒன்றின் மூலம், பெண் தலையில் அடித்துக் கொல்லப்பட்டமை விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed