நவாலியில்  நேற்று (6) இரவு நடந்த விபத்தில் 22 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அராலி, செட்டியார் மடத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார் என்று கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.