தமிழக மாவட்டம் ஈரோட்டில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில், மனைவியின் கண் முன்னே கணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கூலமூப்பனூரைச் சேர்ந்தவர் அர்ஜுன். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்க, அருகில் உள்ள ஓலை குடிசையில் அர்ஜுன் உறங்க சென்றுள்ளார். முன்னதாக அவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டுள்ளார்.

திடீரென ஓலை குடிசை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் கண் விழித்த அர்ஜுன் வெளியேற முடியாததால் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அர்ஜுனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.

உடலில் தீப்பற்றியதால் அர்ஜுன் சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்முன்னேயே கணவர் பலியானதைப் பார்த்து அர்ஜுனின் மனைவி கதறி அழுத்துள்ளார்.

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில் குடிசை தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் அர்ஜுனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.