• Sa. Apr 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேர்த் திருவிழா சிறப்புடன்.

Sep 7, 2022

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது.

வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க, சர்வமங்கள ஆபரணங்கள் மினு மினுங்க அலங்கார நாயகியாக அழகிய பீடத்தில் உள்வீதியில் மெல்ல மெல்லத் திருநடனத்துடன் அசைந்தாடி வந்து காலை-9 மணியளவில் சித்திரத் தேரில் எழுந்தருளினாள்.

சித்திரத் தேர் தடையின்றி வீதி வலம் வர சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு பண்ணுடன் ஓதப்பட்டது. தொடர்ந்து அபிராமிப் பட்டர் அருளிய அபிராமி அந்தாதியும் ஓதப்பட்டது. ஆலய முன்றலில் குவிக்கப்பட்டிருந்த சிதறுதேங்காய்களும் உடைக்கப்பட்டன.

விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமானது.

ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து வடம் தொட்டிழுத்தனர். சித்திரத் தேர் பவனியின் பின்னே 200 இற்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், 150 இற்கும் மேற்பட்ட மாதர்கள் அடியளித்தும் துர்க்கை அம்பாளை மெய்யுருக வழிபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் அடியவர்கள் பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், சப்பாணிக் காவடி, செதில் காவடிகள் முதலான வகை வகையான காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளின் அருள்வேண்டித் துதி செய்தனர். அத்துடன் மங்கையர்கள் பலரும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும், பாற்காவடிகள் எடுத்தும் துர்க்கை அம்பாளை நாடி வரங்கள் வேண்டினர்.

சித்திரத் தேர்ப் பவனியின் பின்னால் பல அடியவர்கள் அம்பாளின் புகழைப் போற்றிப் பஜனை பாடியவாறு கலந்து கொண்டனர். இவ்வாறு பஜனை பாடிய அடியவர்களில் பலரும் திடீரெனத் தம்மை மறந்து பரவச நிலையில் ஆடிய காட்சி பக்திப் பரவசத்தைப் பறைசாற்றுவதாய் அமைந்திருந்தது.

சித்திரத் தேர் முற்பகல்-10 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து பெருமளவான அடியவர்கள் அர்ச்சனை செய்தும் துர்க்கை அம்பாளை வழிபட்டனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தின் தெற்குப் பக்கமாக அமைந்துள்ள திருமுறை மடத்தில் சிறப்புப் பண்ணிசைக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த அடியவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினர், ஆலயத் தொண்டர்கள், சாரணர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். தெல்லிப்பழைப் பொலிஸாரும் ஆலய வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலய நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் ஆலய மண்டபத்தில் அடியவர்களுக்கு விசேட அன்னதானம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அடியவர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் பலவற்றிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுக் குளிர்மைமிகு பானங்கள் பரிமாறப்பட்டன.

இன்றைய தேர்த் திருவிழாவில் யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டிருந்தனர்.

துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க. செந்தில்ராஜக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியைகளை சிறப்பாக ஆற்றினர்.தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டிருந்தது.

இதேவேளை, ஆவணி ஓண நன்னாளான நாளை வியாழக்கிழமை(08.9.2022) துர்க்கா புஷ்கரணி தீர்த்தக் கேணியில் காலை-8.30 மணியளவில் துர்க்கை அம்பாளின் தீர்த்தோற்சவமும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed