குருநாகலில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில் தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜமினி தினுஷிகா மதுஷானி தென்னகோன் என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் நேற்று காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்தில் உள்ள தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போது கணவனால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் வீதியில் முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று காலை 07.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பிரதேச மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முற்பட்டுள்ளனர்.

ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார்.

மனைவியைக் கொன்ற கணவனைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.