பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அமெரிக்காவின் டெக்சாஸ் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸூக்கு செல்வதற்காக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது 34 வயதான பெண்மணி ஒருவர் தனது விமான இருக்கையை விட்டு எழுந்து விமானத்தின் பின்புறத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

விமானத்தின் பணிப்பெண் ஒருவர் அவளை இருக்கைக்கு செல்லுமாறு கூறியதை தொடர்ந்து, தான் ஜன்னலுக்கு வெளியே பார்க்க விரும்புவதாக தெரிவித்து அங்கே நின்றுள்ளார். விமான பணிப்பெண் மீண்டும் அவளை இருக்கைக்கு திரும்புமாறு கூறிய போது, திடீரென பணிப்பெண்ணை தள்ளிவிட்டு விமானத்தின் பின்பக்க கதவை திறக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அவள் கதவை திறக்க முயற்சிக்கிறார் என்று பயந்து விமான குழுவினருக்கு தெரிவித்த பயணி ஒருவர், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவளுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இதனை அந்த பயணி தொடர்ந்து செய்து வந்ததால் கோபமடைந்த அந்த பெண் அவரது தொடையை பலமாக கடித்து காயப்படுத்தியுள்ளார். இறுதியில் அவள் விமான பணிப்பெண்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்று ஆர்கன்சாஸ் கிழக்கு மாவட்ட அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து FBI வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பெண் தனது திட்டத்தில் தோல்வியை சந்தித்த பிறகு விமானத்தின் தரையில் தலையை அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அத்துடன் அதிர்ச்சியில் இருந்த விமான பணிப்பெண்களிடம் இயேசு அவளை ஓஹியோவுக்கு(Ohio) பறக்கச் சொன்னதாகவும், நடுவழியில் விமானத்தின் கதவை திறக்கும்படி கட்டளையிட்டதாகவும் புலம்பியுள்ளார். மேலும் புலனாய்வாளர்களிடம் இந்த பயணத்தில் அவள் பைகள் எதுவும் எடுத்து வரவில்லை என்றும், அவள் கிளம்புவதாக கணவனிடம் சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தான் விமானத்தில் பறக்கவில்லை, கடைசியாக ஒரு விமானத்தில் சென்ற நேரம் சரியாக நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அவள் கவலையால் அவதிப்படுவதாகவும், மிகவும் கவலையாகிவிட்டதாகவும், பொதுவாக இருந்து இருந்தால் விஷயங்களைச் செய்திருக்க மாட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.