பிரித்தானியாவில் Strep A வியாதி தீவிரமடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதை பெற்றோர்கள் தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் பாடசாலை சிறார்கள் மத்தியில் Strep A வியாதி தீவிரமாக வியாபித்து வருகிறது. சமீப வாரங்களில் மட்டும் 7 சிறார்கள் Strep A வியாதியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியா இந்த Strep A. 12 வயது சிறுவன் தான் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த முதல் மாணவன்.

அதே பாடசாலையில் இன்னொரு சிறுவனும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இதுவரை 7 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஹை வைகோம்பைச் சேர்ந்த நான்கு வயது முஹம்மது இப்ராஹிம் அலி என்ற சிறுவன், ஸ்ட்ரெப் ஏ நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

தற்போது, லங்காஷையரின் போல்டனைச் சேர்ந்த நான்கு வயது கமிலா ரோஸ் பர்ன்ஸ், லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

சிறார்கள் பாதுகாப்பாக உள்ளனர் என பாடசாலை நிர்வாகங்கள் உறுதியளித்தும், எளிதில் பரவக்கூடிய இந்த வியாதியால் கவலைப்படும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப மறுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.