• So. Okt 6th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி

Dez 5, 2022

21ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் திட்டங்களில் ஒன்றுக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. 

2028-ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்படும்போது, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக இருக்கும். இதன் பெயர் எஸ்.கே.ஏ. அதாவது ஸ்கொயர் கிலோமீட்டர் அர்ரே. சதுர கிலோமீட்டர் தொகுப்பு.

வானியலில் உள்ள பல புதிர்களுக்கு விடையளிக்கும் திறன் கொண்டதாக இது இருக்கும்.
பல சிறு தொலைநோக்கிகளை இணைத்து தொகுப்பாக ஒரு பிரம்மாண்டத் தொலைநோக்கியை உருவாக்குவதே இதன் அடிப்படையாகும். 

தென்னாப்ரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு தொகுப்பாக இந்தத் தொலைநோக்கி செயல்படும். பிரிட்டனில் இதன் தலைமையிடம் செயல்படும். மாபெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் வகுத்தளித்த கோட்பாடுகள் பற்றிய சோதனைகளை மற்கொள்வதுடன் சூரிய குடும்பத்துக்கு அப்பாலும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இந்த திட்டத்தை உருவாக்கும் எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சிசன் ஷையரிலும் தென்னாப்ரிக்காவின் வடக்கு முனையில் உள்ள கரூவிலும் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சிகள் முடிந்ததும் புல்டோசர்கள் தங்களது பணியைத் தொடங்கும்.

“இந்தத் தருணத்தில் கனவு நிஜமாகிறது” என்று கேஎஸ்ஏ அமைப்பின் தலைமை இயக்குநர் ஃபில் டயமண்ட் கூறினார்.

„இது ஒரு 30 ஆண்டு பயணம். முதல் 10 ஆண்டுகளில் கருத்துருக்களும் யோசனைகளும் உருவாக்கப்பட்டன.  இரண்டாவது 10 ஆண்டுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் செலவிடப்பட்டன.  கடைசியாக கடந்த பத்தாண்டுகளில் விரிவான வடிவமைப்பை உருவாக்குவது, அரசு ஒப்புதல்களைப் பெறுவது, நிதி திரட்டுவது போன்றவை நடந்தன,“ என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார்.

தொலைநோக்கியின் தொடக்கநிலை வடிவமைப்பில்,  சுமார் 200 பரவளைய ஆன்டெனாக்கள் அல்லது டிஷ்கள் அமைக்கப்படும். இவைதவிர 1,31,000 இரட்டைமுனை கொண்ட ஆன்டெனாக்கள் கிறிஸ்துமஸ் மரம் போலப் பொருத்தப்படும்.

லட்சக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் தரவுச் சேகரிப்புப் பகுதியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்தக் கட்டமைப்பு மூலம் விண்ணில் உள்ள இலக்குகளை ஆய்வு செய்யும் போது எஸ்.கே.ஏ.க்கு இணையற்ற உணர்திறன் கிடைக்கும். 

இந்த அமைப்பு சுமார் 50 மெகாஹெர்ட்ஸ் முதல் 25 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண் வரம்பில் செயல்படும். அலைநீளத்தின் அடிப்படையில் பார்த்தால், இது சென்டிமீட்டர் முதல் பல மீட்டர்கள் வரை இருக்கும்.

‚பிக் பேங்‘ எனப்படும் பெருவெடிப்புக்குப் பிறகு சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட சிக்னல்கள் முதல் பல பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள காஸ்மிக் மூலங்களில் இருந்து வரும் வரும் மங்கிப்போன ரேடியோ சிக்னல்கள் வரை கண்டறிய இந்தக் கட்டமைப்பு உதவும்.

பிரபஞ்சத்தில் மிக அதிகமாக உள்ள தனிமமான ஹைட்ரஜனின் முழு வரலாற்றையும் கண்டுபிடிப்பது எஸ்.கே.ஏ-இன் முக்கியமான ஆய்வுகளில் ஒன்றாக இருக்கும்.

„எஸ்.கே.ஏ. வானவியலுக்கு பல முக்கியமான பங்களிப்பைத் தரப்போகிறது“ என்று இந்தத் திட்டத்தின் அறிவியல் செயல்பாடுகளின் தலைவர் ஷரி பிரீன் கூறினார்.

“ ‚வேகமான ரேடியோ வெடிப்புகள்‘ எனப்படும் ஏற்கெனவே கண்டுணரப்பட்ட அம்சங்கள் இதில் அடங்கும். இவை நமது சூரியனில் இருந்து ஓர் ஆண்டில் வெளிப்படும் ஆற்றலை ஒரு நொடியில் வெளியிடுகின்றன. அவை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. அது எப்படி சாத்தியம்? எஸ்.கே.ஏ. பதில் சொல்லும் என்று நம்புகிறேன்.“

ஏற்கனவே சிறிய அளவில் ரேடியோ வானியலுக்காக பயன்படுத்தப்படும் பகுதிகளில் இந்தத் தொலைநோக்கி உருவாக்கப்படுகிறது.

தொலைநோக்கிக்கான தளத்தை விரிவுபடுத்துவதற்கு தென்னாப்பிரிக்காவின் கரூவில் உள்ள விவசாயிகளுடனும் அதேபோல ஆஸ்திரேலியாவின் முர்ச்சிசனில் வஜார்ரி யமாஜி பூர்வகுடிகளுடம் ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கிறது.

வஜார்ரி சமூகத்தினர் எஸ்.கே.ஏ. கட்டமைப்பின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். 

இந்த நாளிலேயே நிலம் கையகப்படுத்தல் தொடர்பான உடன்பாடுகள் அறிவிக்கப்படும்.
இவற்றுடன் சேர்த்து இதுவரையிலான மொத்தச் செலவு 4,300 கோடி ரூபாயாக இருக்கும். திட்டத்தின் மொத்த பட்ஜெய் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய். 

முதல் பெரிய மைல்கல் 2024 இல் எட்டப்பட வேண்டும்.  ஆஸ்திரேலியாவில் நான்கு டிஷ்கள், தென்னாப்பிரிக்காவில் ஆறு டிஷ்கள் ஆகியவற்றைக் கொண்டு ஓர் அடிப்படை தொலைநோக்கியாக செயல்படும். 

இந்தத் திட்டமானது,  2028ஆம் ஆண்டில் 5,00,000 சதுர மீட்டர் அளவிலான தரவுச் சேகரிப்புப் பகுதியைக் கொண்டிருக்கும். ஆயினும் இது 10 லட்சம் சதுர மீட்டர் அல்லது ஒரு சதுர கிலோ மீட்டர் வரை விரிவுபடுத்தக்கூடியது.

ஆயினும் இந்த அமைப்பில் மேலும் மேலும் நாடுகள் இணைந்து தேவையான நிதியை வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். 

இந்த அமைப்பில் தற்போதைய உறுப்பினர்கள்: தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து. 

பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இதில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

கனடா, இந்தியா, ஸ்வீடன், தென் கொரியா, ஜப்பான் ஆகியவையும் இதில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.

„இந்தத் திட்டத்தில் சேர எவ்வளவு ஆர்வமாக இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக மற்ற நாடுகளுடனும் பேசுகிறோம்“  என்கிறார் பேராசிரியர் டயமண்ட்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed