பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகைத் தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மற்றுமொரு பெண்ணுடன் (05) கண்டிக்கு வந்து காலை 10.30 மணியளவில் பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த போது, சுகயீனம் காரணமாக உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்த நிலையில் அது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.