சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பல கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
நேற்று வீசிய கடும் காற்று மற்றும் குளிர் காரணமாக வடமாகாணத்தில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 180 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்கம் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட ஆடுகள், 20 முதல் 30 மாடுகள் இறந்துள்ளன.
மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடரக் கூடும் என்பதால் கால்நடை பராமரிப்பாளர்கள் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்க வேண்டும் எனவும் இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகள், குறிப்பாக நாய்கள், பூனைகள், கோழிகள் போன்றவற்றை பாதுகாப்பான கொட்டில்களில் வைத்து குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.