டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும்.

இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க், டுவிட்டரில் ‚புளூ டிக்‘ வசதியை பெற மாதந்தோறும் 8 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.659) கட்டணம் செலுத்த வேண்டுமென அறிவித்தார்.

இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும் எலான் மஸ்க் தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கிடையில் ‚புளூ டிக்‘ வசதியை பெறுவதற்கு எலான் மஸ்க் கட்டணத்தை அறிவித்ததும் டுவிட்டரில் ஏராளமான போலி கணக்குகள் உருவாகின.

இதன் காரணமாக டுவிட்டரில் ‚புளூ டிக்‘ வசதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் டுவிட்டரில் மீண்டும் ‚புளூ டிக்‘ வசதி கிடைக்கும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.