சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் அவரது மகன் உட்பட மூவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் அவ்விருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.15 மணியளவில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் குழுவொன்று பாடசாலை ஆசிரியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், -வீட்டில் நின்ற ஆசிரியர் மற்றும் மகன் உட்பட மூவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.

இதில் 42வயதான ஆசிரியர்,13வயதான மகன் மற்றும் ஆசிரியரின் உறவினரான 32வயது நபர் ஒருவரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.