அமெரிக்கா மற்றும் கனடாவை மிகக் கடுமையான வட துருவ குளிர் அலை தாக்க ஆரம்பித்துள்ளது.

வட துருவ குண்டுவெடிப்பு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் குளிர் சூறாவளி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனடாவை பொறுத்தவரை தமிழ் மக்கள் அதிகம் செறிந்துவாழும் ரொறண்ரோ பெருநகரப் பிராந்தியத்தில் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

மிக கடுமையாக வெப்பநிலை வீழ்ச்சியடைவதால் மனித உடல் 5 முதல் 10 நிமிடங்களில் உறைந்து விடும் முறையான குளிர் அங்கிகள் இல்லாதவர்களின் உடல் உறைந்து சில வேளைகளில் உறுப்புகள் துண்டிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நத்தார் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவில் வெடிகுண்டை ஒத்த சுறாவளி தாக்குவதால், விடுமுறை கால பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆபத்தான குளிர் நிலைமைகள் ஏற்படுவது தொடர்பிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பரபரப்பான பயணங்கள் இடம்பெறும் ஆண்டின் இறுதி நாட்களுக்கு முன்னதாக 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சக்திவாய்ந்த பனி சுறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனிச் சுறாவளி தீவிரமடைந்துள்ளதால், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் மீளெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பனிச் சுறாவளியானது பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு பனிப்படலத்தை நத்தார் பண்டிகை நாளில் உருவாக்க கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சில பகுதிகளில் வார இறுதிக்குள் மறை 45 முதல் மறை 56 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை மையம் கூறியுள்ளது.