கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கான தினசரி புள்ளிவிவரங்களை சீனா இனி வெளியிடாது என்று தேசிய சுகாதார ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

எனினும் காரணத்தை அந்த ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்த மாத ஆரம்பத்தில் இருந்து சீனா முழுவதும் உள்ள நகரங்களில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.

இதன் விளைவாக மருத்துவமனைகள் மற்றும் தகனச்சாலைகள் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில்; கடந்த வாரம் கட்டாய கொரோனா சோதனையின் முடிவைத் தொடர்ந்து வெடிப்பின் அளவு அதிகமானது என்பதை சீனா ஏற்றுக்கொண்டது.

முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் 6 மரணங்களை மாத்திரமே சீனா அறிவித்திருந்தது.

எனினும் தகனப் பணியாளர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான உடல்களின் வருகையை பதிவிட்டுள்ளனர்.

மருத்துவமனைகள் ஒரு நாளைக்கு பல உயிரிழப்புகளைக் கணக்கிடுவதாகக் கூறியுள்ளன.
சிகிச்சையறைகள் வயதான நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நகரமான கிங்டாவோவில் உள்ள மூத்த சுகாதார அதிகாரி ஒருவரின் தகவலைக்கொண்டு, தினமும் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.

ஷாங்காய்க்கு தெற்கே சுமார் 65 மில்லியன் மக்கள் வசிக்கும் கடலோர மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள், தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.

பீய்ஜிங்கில், கடந்த சனிக்கிழமையன்று பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டவர்களாக பதிவாகியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.