காதில் வலி, இரைச்சல், சிவந்து போகுதல், திரவம் வெளியேறுதல் போன்றவை இருந்தால், அவை காதில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும்.

குளிர், சைனஸ், காற்றில் நிலவும் ஈரப்பதம் போன்றவையும் காதில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும். வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த ஈரப்பதம் பூஞ்சை தொற்றுக்கு சாதகமானது.

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது சிறுவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த தொற்றால் காது வலி தோன்றும். குளிர்ந்த காற்றால் வலி அதிகரிக்கும். முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கேள்வித்திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

* குளிர்ந்த காற்று வீசும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல நேர்ந்தால் வெப்பத்தை தக்க வைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். ‘காட்டன் பட்ஸ்’ கொண்டு காதுகளை மூடுவதும் நல்லது.

* புகைப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும். புகை பிடிக்கும்போது காது குழாய்கள் வீக்கமடையும். அது காதுவலிக்கு வித்திடும். காதில் தொற்று ஏற்படுவதற்கும் காரணமாகிவிடும்.

* செல்போனில் பேச இயர் போனை அதிக நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மணிக்கணக்கில் இசை கேட்பதும் நல்லதல்ல. அதுவும் காதுவலிக்கு வழிவகுத்துவிடும்.

* பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதும் இன்றியமையாதது. குழந்தைகளுக்கு எந்தவொரு நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருக்கிறது. காதில் ஏற்படும் தொற்றுவில் இருந்தும் குழந்தைகளை தாய்ப்பால் பாதுகாக்கும்