• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் கடுங்குளிர்; ஐரோப்பாவில் வெயில்!

Jan 4, 2023

ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஜனவரி மாதத்திற்கான வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது.  போலாந்தின் வார்சாவில் கடந்த ஞாயிறன்று 18.9C (66F) என்ற அளவில் வெப்பநிலை பதிவானது இதேபோல், ஸ்பெயினின் பில்பாவ் பகுதியில் 25.1C என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இது சராசரி வெப்பநிலையை விட 10C அதிகமாகும். 

அமெரிக்காவில் 60க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு காரணமான கடுமையான பனிப்புயலை தொடர்ந்து ஐரோப்பாவில் இந்த வானிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் பனி மற்றும் உறைபனி மழை எதிர்பார்க்கப்படுகிறது. டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ் மற்றும் லூசியானாவில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபுறம் உள்ள ஐரோப்பியப் பகுதியில், ஆண்டின் தொடக்கத்தில் பல இடங்களில் வானிலை இதமாக இருந்தது.

நெதர்லாந்து, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லாட்வியா, செக் குடியரசு, போலந்து, டென்மார்க் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளில் முந்தைய வெப்பநிலை பதிவுகள் முறியடிக்கப்பட்டுள்ளன

வார்சாவில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பதிவான வெப்பநிலை என்பது கடந்த மாதம் பதிவான வெப்பநிலையை விட 4C அதிகமாகும். பெலாரஸில் 16.4C வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த முறை பதிவானதை விட 4.5C அதிகமாகும். 

ஸ்பெயினின், பில்பாவோவில் புத்தாண்டு தின வெப்பநிலை ஜூலை மாத சராசரிக்கு இணையாக இருந்தது. பார்சிலோனா உட்பட கேட்டலோனியாவின் சில பகுதிகளில் நீர் உபயோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

முன்பு பதிவான வெப்பநிலைகள் முறியடிக்கப்படுவது என்பது இயல்பானதுதான் என்றாலும் 10 டிகிரிக்கு மேல் வேறுபாடு இருப்பது என்பது இயல்பானது அல்ல. 

சுவிட்சர்லாந்தில், வெப்பநிலை 20C ஐ எட்டியது. இது, ஆல்ப்ஸ் முழுவதும் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளை பாதித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் 2022ஐ தங்களது வெப்பமான ஆண்டாக பிரிட்டன், அயர்லாந்து, ஃபிரான்ஸ் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்திருந்தன. 

அதேவேளையில், ஐரோப்பா முழுவதுமே வெப்பமான சூழல் நிலவுவதாக கூறமுடியாது, ஸ்கேண்டிநேவியாவில் பனிப்பொழிவும் குளிர்ச்சியான வெப்பநிலையும் பதிவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மாஸ்கோவில் இந்த வார இறுதிக்குள் -20C வரை வெப்பநிலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரிட்டனில் கடந்த ஆண்டில்  டிசம்பர் தவிர்த்த ஒவ்வொரு மாதமும் சராசரியை விட வெப்பமாக இருந்தது. டிசம்பரில் நாட்டின் பெரும்பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது, இருப்பினும் இப்போது நிலைமை லேசானதாகவும் ஈரமானதாகவும் உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை என்பது அடிக்கடி வரக் கூடியதாகவும், அதிக தீவிரம் மற்றும் அதிக நாட்கள் நீடிக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது.

எனினும், பலரின் இறப்புக்கு காரணமாகும் கோடைக்கால வெப்ப அலைகளின் பாதிப்புகளை குளிர்கால வெப்பநிலை ஏற்படுத்துவதில்லை. 

தொழில் புரட்சிக்குப் பிறகு பூமிப்பந்து ஏற்கனவே சுமார் 1.1C வெப்பமடைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்க உறுதியான நடவடிக்கையை எடுக்காத வரையிலும் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed