ரஷ்ய இளம் தம்பதி ஒன்று சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டு, இணையத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணில் பட்டுள்ளது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் குடியிருக்கும் அந்த இளம் தம்பதி, சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்கும் திட்டத்துடன் இணையத்தில் தேடி வந்துள்ளனர். ஆனால் மிருகங்களை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் பார்வையிட்டவர்கள், பூனைகளுக்கான பகுதியில் சென்று ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

அப்பகுதியில், 5 வயது சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து ஒரு நொடி உறைந்து போயுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் இணைய செய்தி பக்கத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், சிறுவன் ஒருவரின் புகைப்படத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது உண்மை தான், மாஸ்கோவில் இருந்தே விளம்பரம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவனை வாங்கும் எண்ணம் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொண்டால், விலை என்ன என்பது தெரிவிக்கப்படும் என விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு வாங்க புறப்பட்ட தம்பதி, இறுதியில் பொலிசாரை தொடர்புகொண்டு, சிறுவன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தகவலை புகாரளித்துள்ளனர்.

தற்போது பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஆனால் விளம்பரம் செய்யப்பட்ட அந்த இணைய பக்கத்தின் நிர்வாகி தெரிவிக்கையில், இது மிக மோசமான பகடியாக இருக்கலாம் அல்லது இதன் பின்னணியில் அதிர்ச்சி சம்பவம் ஏதும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஜூலை 2022ல் பச்சிளம் குழந்தை ஒன்றை 3,000 பவுண்டுகளுக்கு ரஷ்ய தாயார் ஒருவர் விற்பனை செய்துள்ளதுடன், அந்த தொகையில் தமது மூக்கை அழகு படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், குழந்தையை 3,000 பவுண்டுகளுக்கு வாங்கிய தம்பதியானது, குழந்தை பிறக்கும் முன்னரே 274 பவுண்டுகள் தொகையை முன்பணமாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.

ஆனால், குழந்தையை மொத்த தொகையும் செலுத்தி வாங்கிய பின்னர், திடீரென்று நோய்வாய்ப்பட, அந்த தம்பதியிடம் பிறப்பு சான்றிதழ் கேட்டுள்ளனர் மருத்துவர்கள்.

இதனையடுத்து, அந்த குழந்தையின் தாயாருக்கு மேலும் 1,370 பவுண்டுகள் செலுத்தி பிறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். இருப்பினும், பொலிசாரால் அந்த தம்பதி கைது செய்யப்பட்டதுடன், இந்த விவகாரத்தின் பின்னணியில் மனித கடத்தல் இருப்பதையும் கண்டறிந்தனர்.