சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ஜனவரி 12ம் திகதி வரை 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக சீன அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 681 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கொரோனா தொற்றுடன் வேறு நோய்கள் இருந்ததால் 11 ஆயிரத்து 977 பேர் இறந்துள்ளதாகவும் சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது.

சீனாவில் தற்போது நடைபெற்று வரும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக அன்றாட கொரோனா இறப்பு எண்ணிக்கை 36 ஆயிரமாக அதிகரிக்கும் என்று ஏர்ஃபினிட்டி என்ற தனியார் தொற்றுநோய் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.