சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டவிரோத இறக்குமதிகளினால் நாடு பெருமளவு வரி வருமானத்தை இழந்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதியமைச்சில் கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கையடக்கத் தொலைபேசிகளின் IMEI எண்களும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது சட்டவிரோதமாகச் செயல்பட்டாலோ இந்த எண்ணைப் பயன்படுத்தி அடையாளம் காணப்படும். ஆனால் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் தொலைபேசிகள் அவ்வாறு பதிவு செய்யப்படுவதில்லை.

கூடுதலாக, சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து தொலைபேசிகளும் பாதுகாப்பானவை என சரிபார்க்கப்படுகின்றன. இந்த விடயங்களை ஆராய்ந்த இராஜாங்க அமைச்சர், இது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை கடுமையாக்குமாறு சுங்கத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கோரியுள்ள இராஜாங்க அமைச்சர், சட்டவிரோத இறக்குமதியைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்துக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.