• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அழகு சாதன கிரீம் பூசிய 3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு !

Feb 5, 2023

இளம் பெண்கள் உடல் பொலிவு பெறவும், முகத்தை அழகாக காட்டவும், கிரீம் பூசுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை அழகுபடுத்திக் கொள்ள அழகு கலை நிபுணர் ஒருவரிடம் சென்றார். அவர் பெண்ணுக்கு முகத்தில் பூசி கொள்ள கிரீம் ஒன்றை கொடுத்தார்.

அதனை முகத்தில் பூசிய பின்னர் அந்த இளம்பெண் மேலும் அழகாக தோன்றினார். இதனை பார்த்து வியந்து போன பெண்ணின் தாயாரும், சகோதரியும், அதே கிரீமை அவர்களும் பயன்படுத்த தொடங்கினர். ஆரம்பத்தில் பொலிவுடன் காணப்பட்ட அவர்கள், அடுத்தடுத்த மாதங்களில் உடல்நலக்குறைவுக்கு ஆளானார்கள்.

முக கிரீம் பயன்படுத்த தொடங்கிய 4 மாதங்களில் 3 பெண்களுக்கும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், உடல் நலக்குறைவுக்கான காரணத்தையும், அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட காரணம் என்ன? என்பதை பற்றியும் ஆய்வு செய்தனர். 

இதில் பெண்களின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர். ஒருவரது ரத்தத்தில் பாதரசத்தின் அளவு 7-க்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்தத்தில் அது 46 அளவுக்கு இருந்தது.

இதன் காரணமாகவே அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர். இதையடுத்து பாதரசம் பெண்களின் உடலில் பரவியது எப்படி என்பதை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை நடத்தினர். இதில் அந்த பெண்கள் பயன்படுத்திய முக கிரீம் மீது டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனை பரிசோதனை செய்து பார்த்த போது அந்த கிரீமில் அளவுக்கு அதிகமாக பாதரசம் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது தோலில் பூசப்படும் கிரீமில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.

ஆனால் பாதிப்புக்கு ஆளான பெண்கள் பயன்படுத்திய முக கிரீமில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருந்தது. இதன்மூலம் அந்த பெண்களின் ரத்தத்தில் பரவிய உலோக நச்சு ஆரம்பத்தில் முகத்தை பொலிவாக்குவது போல காட்டினாலும் பின்னர் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை கொடுக்கும் என்பதை நிரூபித்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed