பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை முயற்சியையடுத்து, குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர்.

ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையிலேயே குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,டியாகோ கார்சியாவில் தடுப்பு வாழ்க்கையைத் தாங்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு வாழ்வது, எங்கள் வாழ்க்கையை இழப்பது, எங்கள் சுயமரியாதையை இழப்பது போன்று உணர்கின்றோம்.

மற்றும் வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே எமது வாழ்க்கை கடந்து செல்கின்றது. மேலும் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 94 புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறி சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் 22 வயதான பெண் ஒருவரை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக இங்கிலாந்து அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த நிலையில், மார்ச் 1 ஆம் திகதி குறித்த பெண், பென்சில் சீவும் கருவியை உடைத்து அதிலிருந்த பிளேட்டை விழுங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அதே நாளில், அவரது சக புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார். மேலும் மூன்று ஆண்களும் இதே வழிகளில் தற்கொலைக்கு முயன்றனர்” எனவும் தெரிவித்துள்ளனர்.

Von Admin