• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை.

Jun 27, 2023

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான சத்திரசிகிச்கைள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இக் கண்புரை சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன், சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும் மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் கரவெட்டி பிரதேச செயலகப் பிரதேசத்தில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இறுதிக்கட்ட இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 01.07.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் உடுப்பிட்டி கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 

அதேபோன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய  நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இறுதிக்கட்ட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 01.07.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் நடைபெறவுள்ளது. 

குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும்.

கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும், சத்திரசிகிச்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed