நாட்டில் நிலவும் அதிக வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நாட்டிற்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியமில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது யாழ்.மாவட்டத்தில் நிலவுகின்ற வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 21714 குடும்பங்களைச் சேர்ந்த 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கூடுதலாக சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புகள் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 15965 குடும்பங்களைச் சேர்ந்த 49160 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3135 குடும்பங்களைச் சேர்ந்த 11160 பேரும், நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 1028 குடும்பங்களைச் சேர்ந்த 3146 பேரும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 956 குடும்பங்களைச் சேர்ந்த 3067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குடிநீர் விநியோகத்திற்காக தற்போது 6053 குடும்பங்களைச் சேர்ந்த 19704 பேருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.