• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! விவாகரத்து கேட்கும் மருமகள்

Jan 30, 2024

உத்தர பிரதேசத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. சில சமயங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் சின்ன சின்ன முரண்பாடுகளுக்காக கூட விவாகரத்து கேட்டு மனு அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வாறாக உத்தர பிரதேசத்தில் நூதனமான ஒரு விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றம் வந்துள்ளது. ஆக்ரா பகுதியை சேர்ந்த சகோதரிகள் இருவரை அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதில் முதல் மருமகளின் மேக்கப் உபகரணங்களை அவருடைய மாமியார் அடிக்கடி அவரது அனுமதி கேட்காமல் எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பார்த்த மருமகள், மாமியாரிடம் ஒருநாள் வாக்குவாதத்தில் இறங்கிவிட சண்டை முற்றியுள்ளது. இதை மாமியார் பெண்மணி தனது மகனிடம் புகாராக சொல்ல, அதனால் கோபமடைந்த அவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். மூத்த மருமகளின் தங்கையான இரண்டாவது மருமகளும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த மருமகள்கள், தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஒரு மேக்கப் சாதனத்தை பயன்படுத்திய விவகாரம் இரு தம்பதிகள் விவாகரத்து செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed