• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தேவைகள் பூர்த்தியடைய செய்ய வேண்டிய மந்திர வழிபாடு

Okt. 4, 2025

சாதாரணமாகவே புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்குரிய மாதம் என்று கூறுவது உண்டு. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்பது பெருமாளை நினைத்து தளிகை போட்டு வழிபாடு செய்யும் நாளாகவே கருதப்படுகிறது.

அதிலும் முதல் சனிக்கிழமை அன்று மகாலய பட்சம் என்பதால் பலரும் தளிகை போட்டு இருந்திருக்க மாட்டார்கள், இரண்டாவது சனிக்கிழமை திருப்பதியில் பிரம்மோற்சவம் என்பதாலும் பலரும் தளிகை போட்டிருக்க மாட்டார்கள். அதனால் பலரும் மூன்றாவது சனிக்கிழமையை தேர்வு செய்து தளிகை போட்டு பெருமாளை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட மூன்றாவது சனிக்கிழமை என்பது அக்டோபர் மாதம் நான்காம் தேதி வருகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு மட்டும் உகந்த தினமாக இல்லை. அன்றைய தினம் சிவ பெருமானுக்குரிய சனி மகா பிரதோஷமும் இருக்கிறது என்பதால் நாம் சிவபெருமானையும் பெருமாளையும் ஒருசேர வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கைக்கு எது தேவையோ அது விரைவில் கிடைக்கும் என்று கூறலாம்.

ஒவ்வொரு நாளும் சிறப்புமிகுந்த நாளாகவே கருதப்படுகிறது. அந்த நாளுக்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். அந்த வகையில் புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளின் அருளையும் அன்றைய தினம் சனி மகா பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சிவ அருளையும் பெற முடியும். இவர்கள் இருவரின் அருளையும் ஒருசேர பெறுவதற்கு ஒரு சில மந்திரங்கள் இருக்கின்றன.

அந்த மந்திரங்களுள் ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இந்த மந்திர வழிபாட்டை மாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திர வழிபாட்டை கூறுபவர்கள் கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும்.

அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதில் எந்தவித தடைகளும் கிடையாது. இந்த மந்திரத்தை ஆலயத்தில் அமர்ந்து கொண்டு தான் சொல்ல வேண்டும், வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு தான் சொல்ல வேண்டும், பூஜை செய்யும் பொழுது தான் சொல்ல வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் எந்த திசையை பார்த்தவாறு வேண்டுமானாலும் நாம் இந்த மந்திரத்தை கூறலாம்.

இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நந்தி பகவானையும் நினைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் கருடாழ்வாரையும் நினைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் அனைவரையும் முழுமனதோடு நினைத்துக் கொண்டு தங்களுடைய ஒரே ஒரு குறிப்பிட்ட தேவை பூர்த்தியடைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்துவிட்டு பின்வரும் இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 20 நிமிடம் கூற வேண்டும். 20 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் இவர்கள் அனைவரையும் மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய தேவைகள் பூர்த்தி அடைந்து விட்டதாக கருதி அவர்களுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய நியாயமான தேவை விரைவில் பூர்த்தி அடையும். மந்திரம்

” ஓம் ஹ்ரீம் சிவநாராயணாய நமஹ “

சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் ஒருசேர வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான மந்திரமான இந்த மந்திரத்தை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையும் சனி மகா பிரதோஷமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் கூறுபவர்களுக்கு இவர்கள் இருவரின் பரிபூரணமான அருளால் தேவைகள் பூர்த்தியடையும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.