• Mi.. Nov. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Okt. 13, 2025

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்போம். இன்றளவும் அனுபவித்துக் கொண்டே இருப்போம்.

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றிகள் ஏற்படாமல் தடைகள் உண்டானாலோ, தொழில் சிறப்பாக நடைபெறாமல் இருந்தாலோ, வேலையில் எந்தவித முன்னேற்றமும் உண்டாகாமல் இருந்தாலோ, தேய்பிறை அஷ்டமி நாளில் நாம் கால பைரவரை வழிபாடும் செய்யும்பொழுது அவரின் அருளால் நம்முடைய அனைத்து விதமான கஷ்டங்களும் தேய்ந்து போகும் என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. பொதுவாகவே செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய முருக வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று நான் முருகப்பெருமானோடு கால பைரவரையும் நினைத்து வழிபாடு செய்யும்பொழுது கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்குரிய வாய்ப்பு உண்டாகும் என்றே கூறலாம்.

அன்றைய நாளில் நாம் வழிபாடு செய்வதோடு ஒரு சில பரிகாரங்களை செய்யும் பொழுதும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்குரிய வழி உண்டாக்கும்.

அக்டோபர் மாதம் 13-ஆம் தேதியே அஷ்டமி திதி தொடங்கிவிட்டாலும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மாலை 4:40 மணி வரை அஷ்டமி திதி இருக்கிறது என்பதால் நாம் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியே தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமி சமயத்தில் ராகு காலத்தில் தான் காலபைரவருக்கு பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்றுதான் அஷ்டமி திதியோடு சேர்ந்த ராகு காலமான மதியம் 3 மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் காலபைரவரை வழிபாடு செய்வதற்குரிய நேரமாக கருதப்படுகிறது.

அதனால் நாம் நம்முடைய வழிபாட்டையும் பரிகாரத்தையும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்றே செய்வதே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருக வழிபாட்டையும் அதேசமயம் துர்க்கை அம்மன் வழிபாட்டையும் சேர்த்து நாம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பைரவருக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்வதோடு தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கித் தந்து வழிபாடு செய்யலாம்.

அதே சமயத்தில் துர்க்கை அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பதால் அந்த வழிபாட்டிலும் கலந்து கொள்வது நல்லது அதோடு சேர்த்து இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை நம்முடைய வீட்டில் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இதுவரை நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்துமே தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு துவரம் பருப்பும் மிளகும் வேண்டும். அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்றைய தினம் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு உகந்த மிளகை எட்டு என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்திலோ அல்லது அகல் விளக்கிலோ இந்த துவரம் பருப்பையும் அதற்கு மேல் 8 மிளகை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து முழுமனதோடு காலபைரவரை நினைத்து கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

காலபைரவரின் மந்திரம் தெரியும் பட்சத்தில் அந்த மந்திரத்தை கூறலாம். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். இந்த துவரம் பருப்பும் மிளகும் அப்படியே பூஜை அடியில் இருக்கட்டும்.

மறு நாள் புதன்கிழமை அன்று காலையில் மிளகை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு துவரம்பருப்பை பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும். இந்த எட்டு மிளகையும் தங்கள் கைப்பட தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கும் திருஷ்டி சுற்றுவது போல் சுற்றி கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதுவரை உங்களை ஆட்டிப்படைத்த கஷ்டங்கள் படிப்படியாக விலகும்.

செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை அஷ்டமியான இந்த நாளை தவிர விடாமல் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கடன் தொடர்பான பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் கஷ்டங்களும் காணாமல் போகும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.