நாட்டின் பல பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. விக்டோரியா நீர்த்தேக்கம், வல்வெட்டித்துறை மற்றும் கெக்கிராவை பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றையதினம் தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உரியிழந்துள்ளார்.
சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் உடற் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அநுராதபுரம்கெக்கிராவை, சமகிகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரி ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஹபுத்தளை பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் உட்பட ஐந்து பேரடங்கிய குழுவினர் அங்கு நீராட சென்றுள்ளனர்.
அவர்களில் மூவர் நீராடிவிட்டுத் திரும்பியுள்ளனர். எனினும், இவ்விரு சகோதரர்களும் அங்கேயே தங்கியிருந்த போதே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
