• Di.. Nov. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வங்கக்கடலில் உருவாகும் அர்னாப் புயல்; சிவப்பு எச்சரிக்கை

Okt. 23, 2026

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு அந்தமான் தீவுகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் தற்போது ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகியுள்ள நிலையில், அது அடுத்த சில மணிநேரங்களில் தாழமுக்கமாக வலுவடைய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

அதன்பின்னர், இத்தொகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடும்.

அத்துடன், ஒக்டோபர் 26 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதியில் இது புயலாகவலுவடையக் கூடிய அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு அட்சரேகை 10 இற்கும் 20 இற்கும் இடையிலும், கிழக்கு நெட்டாங்குக் கோடு 80 இற்கும் 95 இற்கும் இடையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், தற்போது குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடுவோர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.