தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, கடந்த 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 25-ம் திகதி தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குழு அமைத்து, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றுவருகிறது. சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் மற்றும் அவருடைய வீட்டில் பணிபுரிந்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

இந்த விசாரணைக் காலத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மருத்துவக்குழுவை அமைத்துள்ளது எய்ம்ஸ்.

எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியான வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.