தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிஸ்ட லாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

அத்துடன் குறித்த பணத்தை பெறுவதற்கு 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அப் பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகுவைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறையிட்டுள்ளார்.

இதேபோல் சங்கரத்தை துணைவி பகுதியில் உள்ள ஆண் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியிலில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

அவரும் பணத்தை வைப்பிலிட்ட பின்னர் அந்த இலக்கத்திற்க அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

Von Admin