ஐரோப்பா முழுவதும் வீசும் வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகல் நாடுகளில் இதுவரை 1027 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்த்துகலில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் வரலாறு காணாத வெப்பத்தால் 238 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள், குறிப்பாக கொளுத்தும் வெயிலால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழன் அன்று Pinhao நகரில் வெப்பநிலை 50°Cஐ நெருங்கியது. இதனால் ஐந்து பிராந்தியங்களுக்கு வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே கடும் வெப்ப அலை காரணமாக போர்த்துகல், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளில் கடந்த 10 நாட்களாக காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், 3,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் காட்டுத் தீயால் சுமார் 30,000 ஹெக்டேர் நிலங்கள் அழிந்துள்ளன.

இதனிடையே, காட்டுத்தீ காரணமாக போர்த்துகல் திங்களன்று தேசிய எச்சரிக்கை நிலையை அறிவித்தது. மட்டுமின்றி, இந்த காட்டுத்தீயானது கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ளவையில் மிக மோசமானதாகவும் கூறப்படுகிறது.

பிரான்சில் Gironde பகுதியில் இதுவரை 2,700 ஹெக்டேர்களுக்கு மேல் எரிந்து சேதமாகியுள்ளது. Landiras நகரில் இருந்து 500 குடியிருப்பாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள முகாம்களில் இருந்து சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

Von Admin