• Mi. Dez 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வரலட்சுமி நோன்பின் சிறப்பு

Aug 5, 2022

மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் ‚வரலட்சுமி‘ என அழைக்கப்படுகிறார்.

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும். மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும்.

இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது.

திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் கிடையாது. அவர்கள் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை செய்யலாம்.

விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.

மகாலட்சுயின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை, நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச் சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகாலட்சுமிக்கு வரவேற்புக் கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில் நோன்பு சரடை கும்பத்தோடு வைத்து, பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற உணவுப் பொருட்கள் படைக்க வேண்டும்.

வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களை கூறி, தூப தீப ஆராதனை களைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும்.பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும்.

சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர்.

இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும் 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும்

8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார். அத்துடன் செவ்வாயும், சுக்கிரனும் பலம் பெற்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்க சுமங்கலியாவார்.

இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகளிடம் வரலட்சுமி நோன்பு அன்று ஆசி பெற்றால் எத்தகைய திருமணத்தடையும் அகலும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

அதனால் பூஜைக்கு வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச் சிறப்பு. மறுநாள் புனர் பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இந்த பூஜையை தொடர்ந்து ஆண்டு தோறும் செய்து வந்தால் லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காலமாகும். லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி ஆகும்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed