இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் பேசியதாவது,

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் வாராந்தம் ஐந்து நாட்களும் விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடத்தப்படுகின்றதாக தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு போக்குவரத்து காரணங்களால் சமூகமளிக்க முடியாத நிலைமைகள் குறித்த முறைப்பாடுகள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

எனினும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் அது குறித்து போக்குவரத்துசபை உள்ளிட்ட தரப்புடன் கலந்துரையாடி அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வாராந்தம் ஐந்து நாட்களும் பாடசாலைகளை நடத்துவதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளை நடத்திச் செல்வது குறித்த எச்சரிக்கை எதனையும் சுகாதார அமைச்சு இதுவரையில் முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதற்கான வழிகாட்டிகள் மற்றும் அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வழங்கினால் அதன்படி பாடசாலைகள் செயற்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Von Admin