யாழில்(jaffna) விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(19) உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனும் அவரது நண்பரும் கடந்த 11ஆம் திகதி யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
இதன்போது வீதியில் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டனர். இதன்போது பருத்தித்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.
இதன்போது காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் வீடு திரும்பினர்.
இருப்பினும் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.