யாழ்ப்பாணத்தில்(jaffna) நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளதுடன் அவரின் செயற்பாட்டையும் பாராட்டியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் கடந்த 09.04.2025 அன்று தனது நகையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பின்னர் குறித்த நகையை கண்டெடுத்தவர் அதனை நகை கடையில் கொடுத்து வேறு நகை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது நடந்த சம்பவத்தையும் நகைக்கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
இதன்போது நகைக்கடை உரிமையாளர் இது தவறு என அவருக்கு எடுத்துக்கூறிய பின்னர், நகை காணாமல் போனதாக ஏதாவது காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதா என தேடுதலில் ஈடுபட்டார்.
அந்தவகையில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தெரியவந்தது. இந்நிலையில் நகையை தொலைத்த பெண்ணை அழைத்த நகைக்கடை உரிமையாளர், மதகுரு ஒருவருக்கு முன்னால் வைத்து அந்த நகையை நேற்றையதினம் கையளித்துள்ளார்.
நகையை தொலைத்த பெண்ணிடமே மீண்டும் நகையை வழங்கிய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த நகைக்கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றனர்.