கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பெண்ணை கொலை செய்து , அவரது உடலை ஒரு பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் குற்றவாளி வைத்துச் சென்றிருந்தார்.
அந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் பேட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார்.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.