அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து மே மாதம் 28ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரிக்கும். அதனாலேயே இதை தோஷம் என்று கூட கூறுவது உண்டு.
இப்படி வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடிய நாட்களில் ஆலயங்களில் பலவிதமான சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுவதுண்டு.
அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய சுவாமி சிலைகளை எந்த முறையில் நாம் பராமரித்தால் வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும் .
பலரும் ஆலயத்திற்கு நிகராக தங்களுடைய வீட்டு பூஜை அறையில் சுவாமி சிலைகளை வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வார்கள்.
நம்முடைய உள்ளங்கை அளவிற்கு சுவாமி சிலைகளை வைப்பதன் மூலம் எந்தவித வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அனுதினமும் நெய்வேத்தியம் வைத்தால் போதும். இதே நம்முடைய உள்ளங்கையை விட சற்று பெரியதாக வைக்கும் பொழுது ஆலயங்களில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விதமான வழிமுறைகளையும் பின்பற்றி அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு பெரிய சுவாமி சிலைகளையோ அல்லது வேல், திரிசூலம் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பவர்கள். அக்னி நட்சத்திர நாட்களில் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்தில் சுபிக்ஷன் உண்டாகும்.
இல்லையேல் தேவையற்ற மன கஷ்டங்களும், கவலைகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் அக்னி நட்சத்திர நாட்களில் சிவலிங்கத்திற்கு மேலே ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி 24 மணி நேரமும் நீர் அபிஷேகம் நடைபெறுவது போல் வைப்பார்கள்.
இதன் மூலம் சிவபெருமான் எப்பொழுதும் குளிர்ச்சியுடன் இருப்பார் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் இதை பல ஆலயங்களில் பின்பற்றுவது உண்டு. அதே போல் நாமும் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சுவாமி சிலைகளை ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் சிறிது பன்னீரை கலந்து சிறிதளவு வெட்டிவேரையும் சேர்த்து அதற்குள் வைக்க வேண்டும். எந்த சுவாமி சிலைகளாக இருந்தாலும் சரி, வலம்புரி சங்கு, சாலிகிராமம் போன்ற எது இருந்தாலும் சரி அதை நாம் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.
தண்ணீரில் போட்டு வைக்க விருப்பமில்லை என்பவர்கள் சிறிது நெல்லை பரப்பி அதற்கு மேல் வைத்தும் வழிபாடு செய்யலாம். இயன்றவர்கள் தினமும் அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி சிலைகளை நாம் அக்னி நட்சத்திர நாட்களில் பராமரிப்பதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் எந்தவித தோஷமும் ஏற்படாது. அதே சமயம் நம்முடைய வாழ்க்கை சுபிட்சமாக மாறும்.
மேற்சொன்ன வழிமுறைகளில் நம்மால் எதை செய்ய முடியுமோ அதை முறையாக அக்னி நட்சத்திர நாட்களில் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து தெய்வங்களும் நமக்கு அருளாசி புரிந்து நம்முடைய வாழ்க்கையை சுபிட்சமாக மாற்றுவார்கள்