தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்

ஊர்காவற்றுறை, நாரந்தனையைச் சேர்ந்த 22 வயதான அனுஷ்டா சதீஸ்குமார் என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயான இவர் கடந்த 20ஆம் திகதி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

அவர் உடனடியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தொடர் சிகிச்சைகளில் இருந்த அவர், நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பி.றேமகுமார் மேற்கொண்டுள்ளார்.

சந்தேகம் காரணமாக கணவனின் சித்திரவதைகள் தாங்க முடியாதே அனுஷ்டா தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார் என்று இறப்பு விசாரணைகளின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுஷ்டா தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு அவரது கணவரும் இருந்துள்ளார் என்றும், அவர் அனுஷ்டாவைத் தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

தற்போது அனுஷ்டாவின் கணவர் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Von Admin