நாட்டில் திரவ பால் விலையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திரவ பால் மீதான வரியை நீக்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் பால் மா இறக்குமதி செய்யப்படாத சூழலில் உள்ளூர் திரவப் பாலுக்கு வரி விதிக்கப்பட்டமை தொழில் துறையையும் அதன் பொறிமுறைகளையும் பாதித்துள்ளதாக அச்சபை குறிப்பிட்டுள்ளது.

பொதியிடல் மீது விதிக்கப்படும் 5% வரி காரணமாக, திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், திரவப் பாலின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

இதெவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக உள்ளூர் பால் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் பொதிகளும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.