பருத்தித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அல்வாய் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் தனது மனைவியை தாக்கியதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து, காவல் நிலைய தடுப்புக் காவலில்  வைத்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த நபர் தடுப்புக்காவலில், தனது சாரத்தினை கழட்டி , அதன் மூலம் தூக்குப்போட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதனை கண்ணுற்ற காவல்துறையினர் அவரை காப்பாற்றி மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Von Admin