• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். பல்கலையில் நால்வருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு.

Jan 29, 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் படி, மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ நிபுணர் பி. குமரேந்திரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.கெங்காதரன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், நிதி முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. லிங்கேசியா நிதி முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆர். ஶ்ரீகரன் இரசாயனவியலில் பேராசிரியராகவும் இவ்வாறு  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

 அதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மனித வள முகாமைத்துவ பேராசிரியராக உயர்வு பெறும் கலாநிதி நவநீதகிருஷ்ணன் கங்காதரன் மற்றும் நிதி முகாமைத்துவ பேராசிரியராக கலாநிதி திருமதி லிங்கேசியா கங்காதரன் அவர்களும் தம்பதிகள்  என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed