முள்ளிவாய்க்கால் வீதியில் இரட்டை வாய்க்கால் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை (08-02-2022) புதுக்குடியிருப்பு – முள்ளிவாய்க்கால் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து தெரியவருவது, கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் பின்னால் உந்துருளியில் வேகமாகப் பயணித்த இளைஞன் பேருந்து திடீரென பயணிகளை இறக்க நின்றபோது பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உந்துருளியின் முன்பக்கம் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இளைஞன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.