சுவிட்சர்லாந்து முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

சுவிஸ் ஜனாதிபதி பதவியுடன், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் Ignazio Cassisக்கு புதன்கிழமை மதியம் PCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் Cassisக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தன.

Bernஇல் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், Cassis சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக அறிவித்த சிறிது நேரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று என பரிசோதனை முடிவுகளிலிருந்து தெரியவந்ததும், Cassis உடனடியாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் ஜனாதிபதியான Cassisக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், அவர் ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டிலிருந்தவண்ணமே தனது பணிகளைத் தொடருவார் என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கிடையில் அவர் முனிச் பாதுகாப்பு மாநாடு உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் என்றும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் நடத்தப்படும் முனிச் பாதுகாப்பு மாநாடு இன்றும் நாளையும் அதாவது, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  

Von Admin