• Do. Sep 12th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கே அனுமதி!

Feb 18, 2022

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திய அட்டை வைத்திருப்பவர்களுக்கே ஆலயம் வர அனுமதிக்கப்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் 1 ஆம் திகதி (01-03-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற உள்ளது.

இந்த நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது,

கடந்த வருடத்தை விட இவ்வருடம் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி வழங்கி உள்ளோம். வருகை தருகின்ற பக்தர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாக தடுப்பூசியை அட்டையை அல்லது தடுப்பூசி அட்டையினை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு வர வேண்டும். கடமையில் ஈடுபடுத்தப்படும் பொது சுகாதார பரிசோதகர்கள் நுழைவாயிலில் பரிசீலனை செய்வார்கள்.

அதன் போது காண்பிக்க வேண்டும்.திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தருகின்ற சகல பக்தர்களும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும். அதற்கான சகல ஒழுங்குகளும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் உணவு வழங்குவதற்கான வியாபார நிலையங்கள் அமைக்கப்படும்.ஆனால் உணவை பெற்றுக் கொண்டு சென்று உண்ண வேண்டும். உணவகங்களில் இருந்து சாப்பிட முடியாது.

பாலாவி தீர்த்தத்தில் இறங்கி குளிப்பதற்கு சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் பாலாவி தீத்தத்தை பெற்றுக் கொள்வதற்கு அங்கு கடமையில் இருக்கும் தொண்டர்கள் நீரை அள்ளி பக்தர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வர முடியாத பக்தர்களுக்காக தொலைக்காட்சிகளில் நேரடி ஒலிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்,   தனியார் மற்றும் அரச வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  மேலும் இந்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபை,திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed