வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் பாரதிபுரம் 50 வீட்டுத் திட்ட சந்திக்கு அண்மையில் உள்ள தம்பனைப் புளியங்குளம் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டர் சைகிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, குறித்த விபத்துக்குள்ளான முதியவர் மீது வீதியால் வந்த பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதிச் சென்றமையால் அவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறிப் பலியானார்.

குறித்த விபத்ததுடன் சம்மந்தப்பட்ட வாகனம் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் நெளுக்குளம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தடவியல் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற முதியவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் சாரதியான பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Von Admin