அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சேக்ரமென்டோ நகரில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் அறுவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் நிரம்பிய பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒலித்ததை அடுத்து மக்கள் தெருக்களில் ஓடினர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. „இது மிகவும் சோகமான சூழ்நிலை“ என்று தலைமை காவல்துறை அதிகாரி கூறினார்.
புலனாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், பொறுப்பானவர்களை அடையாளம் காண உதவும் எந்தவொரு தகவலையும் அளிக்க பொதுமக்கள் முன்வருமாறும் அதிகாரி கூறினார். துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டரில் வெளியாகி உள்ளது. அதில், துப்பாக்கியால் தொடர்ந்து சுடும் சத்தம் கேட்கிறது. பொதுமக்கள் உயிருக்குப் பயந்து தெருவில் சிதறி ஓடுகிறார்கள். சம்பவ இடத்திற்கு அம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன.