யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில்  சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும்  சிறுவனே  உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் (வயது 45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் (வயது 15) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.


அதில் பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும் , சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வா பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.