திருடப்பட்ட குழந்தைகளை கடத்தல்காரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர், 1990கள் வரை இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிறந்த குடும்பங்களைத் தேடிக் கண்டறிவதற்கான, ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் சுவிஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.

1990களின் இறுதி வரை இலங்கையில் இருந்து தத்தெடுப்புகள் சில சந்தர்ப்பங்களில் கடுமையான முறைகேடுகள் பற்றிய தெளிவான அறிகுறிகள் இருந்தபோதிலும் அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருந்ததை 2020இல் சுவிஸ் அரசாங்கம் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டது.

அதிகாரிகளின் இந்த அலட்சியம் இன்றுவரை தத்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என நீதி அமைச்சு கூறியது.

இந்த நிலையில், “பேக் டு தி ரூட்ஸ்” உதவிக் குழுவுடன் இணைந்து மூன்றாண்டு திட்டத்திற்காக மத்திய மற்றும் மாகாண அரசுகள் வருடாந்தம் 250,000 சுவிஸ் பிராங்குகளை வழங்கவுள்ளது.

1973 முதல் 1997 வரை இலங்கையில் இருந்து 950 குழந்தைகளின் வருகையை சுவிஸ் அதிகாரிகள் அங்கீகரித்ததாக அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சூரிச் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (ZHAW) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

இருப்பினும் தத்தெடுப்புகளின் சரியான எண்ணிக்கையைக் குறிப்பிடுவது சாத்தியமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Von Admin