தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதேபோல மற்றொரு அதிர்ச்சிகர தகவலையும் ஐநா வெளியிட்டுள்ளது.

அதாவது 2050 ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பகுதி வறுமையால் பாதிக்கப்படுமாம். 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்த நிலப்பரப்பின் அளவு இருக்கும். 

பூமியில் ஒரு கண்டமே வறட்சியால் பாதிக்கப்பட்டால் எப்படியிருக்கும்…. இதே நிலை நீடித்தால், விரைவில் தென் அமெரிக்க கண்டம் அளவிலான நிலப்பகுதி வறட்சியாகிவிடுமாம். 

ஏற்கெனவே உலக அளவில் 230 கோடி மக்கள் நித்தமும் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், இன்னும் 8 ஆண்டுகளில் வறட்சியால் உணவு கிடைக்காமல் 70 கோடி மக்கள் உணவு கிடைக்காமல் இடம் பெயரும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

வறட்சியால் பாதிக்கப்படுவதில் இருந்து வல்லரசு நாடுகளால் கூட தப்பிக்க முடிவதில்லை. பற்றி எரியும் கலிபோர்னியா, பிரேசில், ஆஸ்திரேலியா காட்டுத்தீ சம்பவங்களே இதற்கு காரணம். 

அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சியால் இருண்டு போயுள்ள நாடுகளின் பட்டியலில் நமது அண்டைய நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகளும், போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவும் இடம் பிடித்துள்ளது. மேலும் இதில் கடந்த நூற்றாண்டில் ஆசிய நாடுகளே கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மட்டும் சுமார் 140 கோடி மக்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தான். 

ஏற்கெனவே பூமியில் 40 சதவீத நிலம் வறட்சியால் முற்றிலும் சீரழிந்துவிட்ட நிலையில், வறட்சியில் பிடியில் இருந்த தப்பிக்காவிட்டால், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.