உலக நாடுகளில் உள்ள மற்ற பகுதிகளை காட்டிலும், ஆப்பிரிக்க நாடுகளில் மிகுந்த வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூழலில், நாட்டு மக்கள் மிகுந்த உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் பிற காரணங்களாலும், அந்நாட்டு மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜி7 நாடுகள் பங்கேற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் உலக உணவுத் திட்டத்தின் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இயக்குனரான மைக்கேல் டன்போர்டு என்பவர் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதாவது ஆப்பிரிக்காவில் நிகழவிருக்கும் பேரழிவினை தவிர்ப்பதற்கு, உலக நாடுகள் உடனடி உதவிகள் செய்ய  முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சோமாலியாவில் நிகழ்கின்ற கடும் பஞ்சத்தை  போக்குவதற்கு உலகநாடுகள் உதவ முன் வர வேண்டும். மேலும் ஆப்பிரிக்க நாட்டு  மக்களிடையே நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் ரஷ்ய உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக உணவு தானியங்கள் பெறுவதில் கடந்த சில மாத காலமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே இதே நிலைமை நீடித்தால், பெரும் பேரழிவு நிகழ வாய்ப்புள்ளது என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இதற்கு முன்பாக சோமாலியாவில் பஞ்சத்தினால் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர், கடந்த 2011-ஆம் ஆண்டு பலியாகியுள்ளனர். அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர், குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய சூழல், அதை விட மோசமாகி வருகிறது. இவ்வாறு உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால், 3 லட்சத்து 86 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அறிக்கை வெளியிட்டுள்ளது.